பெண்களின் பாதுகாப்பு என்பது எந்த அரசுக்கும் வெறும் தேர்தல் வாக்குறுதியாக இருக்க முடியாது. அது ஆட்சியின் செயல்திறனை அளவிடும் முக்கியமான அளவுகோலாகும். அந்த வகையில், தமிழ்நாட்டில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்த முக்கியத் திட்டங்களில் ஒன்று “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை”. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கவும் இந்தப் படை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
முதலமைச்சராக பதவியேற்ற பிறகு கையெழுத்திட்ட முதல் மூன்று கோப்புகளில் ஒன்றாக இந்தத் திட்டம் இடம்பெற்றது. இதன் மூலம் பெண்களின் பாதுகாப்புக்கு தனிப்பட்ட முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக ஆளுங்கட்சி விளக்கியது. திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் திட்ட அறிவிப்புக்கும் அதன் செயல்பாட்டுக்கும் இடையே ஏற்பட்ட தாமதம் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு வழிவகுத்தது.
ஆரவார தொடக்கம்
இருப்பினும் ஒரு வழியாக ஜூன் 9 அன்று இந்த அதிரடிப்படை முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. “இந்த நிகழ்வு என் மனதிற்கு நெருக்கமானது” என்று முதலமைச்சர் உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார். பொதுமக்களின் அமைதியைக் குலைக்கும் சமூக விரோத சக்திகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது இந்த அதிரடிப்படை எந்தவித சமரசமும் இன்றி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரித்தார். சட்டம்-ஒழுங்கைப் பேணுவதில் இந்தப்படை ஒரு புதிய மைல்கல்லாக விளங்கும் என்றும் உறுதியளித்தார். ஆனால், இந்த படை தொடங்கி வைக்கப்பட்ட சில நாட்களிலேயே, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் கசப்பான யதார்த்தம் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

இந்த நிலையில், முதலமைச்சர் பெருமையோடு தொடங்கிய ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ தற்போது கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறதா? என்ற பலத்த கேள்வியைத் தமிழக மக்களின் மனங்களில் எழுப்பியுள்ளது அண்மைய கொடூரச் சம்பவங்கள்.
சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே?
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மூன்று வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக இன்று வெளியான தகவல் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, “சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே?” என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பத் தொடங்கியுள்ளன.
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், “ஆரம்பித்த நாள் முதல் கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் சிங்கப்பெண் அதிரடிப்படை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும்” என்று விமர்சித்துள்ளார். அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், “பெண்கள் பாதுகாப்பு எங்கே? என்ன செய்கிறது காவல்துறை? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப்படை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வெண்டிலேட்டரில் …
இதே விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கும்மிடிப்பூண்டி 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ள அவர், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை “வெண்டிலேட்டரில் இருக்கும் அளவுக்கு மோசமடைந்துள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் உயர் அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும், நிலைமை தொடர்ந்தால் திமுக சார்பில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த தயங்கமாட்டோம் என்றும் எச்சரித்துள்ளார்.
உண்மையில், இந்த விமர்சனங்கள் அரசியல் தாக்குதல்களாக மட்டுமே பார்க்கப்பட முடியுமா? கடந்த ஒரு மாத காலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக வெளியான குற்றச் சம்பவங்களின் பட்டியலைப் பார்த்தால் அந்த கேள்விக்கு எளிதில் பதில் கூற முடியாது. கோவை, விழுப்புரம், மதுரை, சென்னை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாலியல் சீண்டல், பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இதில் மேலும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்துவது என்னவென்றால், சில வழக்குகளில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் பெயர் அடிபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. சேலம் மற்றும் சென்னை பகுதிகளில் தவெக நிர்வாகிகள் தொடர்புடையதாக கூறப்படும் பாலியல் புகார்கள் குறித்து அதிமுக தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. ஆட்சிக்கு வந்த கட்சியின் நிர்வாகிகளே குற்றச்சாட்டுகளில் சிக்கும்போது, பெண்கள் பாதுகாப்பு குறித்த அரசின் உறுதிமொழி சந்தேகத்துக்குள்ளாகும் என்பது எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது.
செயல்படுகிறதா சிங்கப் பெண் படை?

எனினும், ஒரு முக்கியமான உண்மையையும் கவனிக்க வேண்டியுள்ளது. “சிங்கப்பெண் அதிரடிப்படை” என்பது காவல்துறையின் துணைப் பிரிவாகும். மாநிலத்தில் நடைபெறும் ஒவ்வொரு குற்றத்தையும் அது முன்கூட்டியே தடுக்க முடியும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்ட உடனே குற்றங்கள் முற்றிலும் இல்லாமல் போய்விடும் என்றும் கூற முடியாது. ஆனால் இந்தப் படை உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? அதன் செயல்பாடுகள் என்ன? இதுவரை அது என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதற்கான தெளிவான தகவல்களை அரசு வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பெண்கள் பாதுகாப்பு என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டுமானால் வெறும் அறிவிப்புகள் போதாது. களத்தில் கண்கூடும் நடவடிக்கைகள் தேவை. தீவிர ரோந்துப் பணி, விரைவு புகார் தீர்வு, பெண்களுக்கான அவசர உதவி அமைப்புகள், குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனை போன்றவை மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கும்.
சிங்கப்பெண் அதிரடிப்படை உண்மையில் செயல்பட்டு வருகிறதா, அல்லது எதிர்க்கட்சிகள் கூறுவது போல் கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறதா என்ற கேள்விக்கான பதிலை,
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் விஜய், வரவிருக்கும் நாட்களில் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகளும் செயல்பாடுகளுமே தீர்மானிக்கும்.
