தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மீண்டும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர்.
அதற்காக மகுடஞ்சாவடி ப்குதியில் இடத்தை தேர்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி பிரச்சாரக் கூட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கூறி சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சேலம் மாநகர காவல் ஆணையர் அனில்குமார் கிரி தலைமையில் தவெக விஜய் பிரச்சாரக் கூட்டம் நடத்த இருந்த இடமான சீலநாயக்கன்பட்டி தாளமுத்து நடராஜன் திடலை ஆய்வு செய்தனர்.
இதற்கிடையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப தவெக தலைவர் விஜயின் மக்கள் பிரச்சாரத்திற்கான மனு தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் அளித்திருந்த மனுவை காவல்துறையினர் திருப்பி வழங்கியதாகவும் கூறப்பட்டது.
இந்தநிலையில், தற்போது 40க்கும் மேற்பட்ட நிபந்தனைகளுடன் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாளமுத்து நடராசர் மைதானத்தில் பிப்ரவரி 13ஆம் தேதி விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, கர்ப்பிணி பெண்கள, குழந்தைகள், வயதானவர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கட்சியினர் ஐந்தாயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது
நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு உரிய பாஸ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மதியம் 12 மணி முதல் 3 மணிக்குள் நிகழ்ச்சி நடத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
