திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 -ஐ நிறைவேற்றிவிட்டதாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
திமுகவின் ஆட்சியில் துறை ரீதியிலான ஊழல் பட்டியலை தயாரித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதனை 2 நாட்களுக்கு முன்பு ஆளுநரிடம் வழங்கி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக திமுகவின் ஆர்.எஸ். பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற திராவிட பொங்கல் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் மக்களுக்கு தொடர்ந்து நன்மைகள் கிடைக்கின்றன. தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மீதமுள்ள வாக்குறுதிகளும் மீதமுள்ள நாட்களில் நிறைவேற்றப்படும். அரசு ஊழியர்களின் பிரச்சினை நிரந்தரமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாக ஆளுநர் ரவியிடம் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்துள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், புகார் அளித்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அத்தனை அதிமுக முன்னாள் அமைச்சர்களும் ஊழல்வாதிகள்தான்.
உலக மகா திருடர்கள் அனைவரும் சேர்ந்து பெரிய திருடரிடம் மனு கொடுத்த கதை தான், கவர்னரிடம் அதிமுக மனு அளித்த செய்தி” என ஆர்.எஸ். பாரதி கூறினார்.
அதிமுக – பாமக கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிமுக -பாமக கூட்டணி ஏற்கனவே இருந்த கூட்டணி தானே” என்றார். மேலும் பேசிய அவர், “இந்தியாவிலேயே அதிக ஊழல் செய்தது ஜெயலலிதா தான் என மோடியும் அமித் ஷாவும் சொன்னார்கள். ஆனால் இப்போது அவர்கள் கூட்டணியில்தான் அதிமுக இருக்கிறது” என்றார்.
