திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக 525 வாக்குறுதி கொடுத்தது, அதில் நான்கில் ஒரு பங்கு கூட செய்யவில்லை. ஆனால், 98% நிறைவேற்றிவிட்டதாக பச்சைப் பொய் சொல்கிறார் ஸ்டாலின். மக்கள் திமுகவின் பொய்யைப் புரிந்துகொண்டனர், ஆட்சியை விரட்டியடிக்க முன்வந்துவிட்டார்கள்.
அரசு ஊழியர்கள் போராடுகிறார்கள், தூய்மைப் பணியாளர்களை திமுக அர்சு கொடுமைபடுத்தியது. சத்துணவு அமைப்பாளர்களும் போராடினார்கள்.சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு முக்கியக் காரணம் நிரந்தர டிஜிபி நியமிக்கவில்லை என்பதுதான். உச்சநீதிமன்றம் சொல்லியும் நியமிக்கத் திராணியற்ற அரசு திமுக அரசு.
நான் சொல்வது எல்லாமே பத்திரிகையிலும் ஊடகத்திலும் வந்தவை, இதனை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டிய கடமை மீடியாவுக்கு இருக்கிறது. குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. ஊழல் விளம்பரம் மட்டும் செய்த திமுக ஆட்சியின் ஆட்டம் கடந்த 15ம் தேதியோடு முடிவு கட்டப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டுக்கு இனி வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது.
பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி விரைவில் வரும். இளைய சமூகத்துக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது. மே மாதம் ஆட்சிக்கு வருவோம், நல்லாட்சி கொடுப்போம் என்றார்.

