தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த சூழலில் கூட்டணி கணக்குகளை இறுதி செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விசில் சின்னம் ஒதுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று அதே சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது.

ஜனநாயகன் படப் பிரச்சினை, சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை விஜய் சந்தித்து வரும் நிலையில், தவெகவிற்கு பொதுச் சின்னம் கிடைக்குமா? என்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக அக்கட்சி தொண்டர்கள் இடையே விவாதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு பொதுச்சின்னம் அளிக்கக்கோரி விஜய் தரப்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. விசில் உள்ளிட்ட சின்னங்கள் அடங்கிய பட்டியலில் தவெக சார்பில் வழங்கப்பட்டதை அடுத்து கோரிக்கை ஏற்கப்பட்டது.

அங்கீகரிக்கப்படாத கட்சியான தவெக, ஆணைய விதிப்படி கணக்குகளை தாக்கல் செய்ததால் பொது சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. விசில் சின்னத்தை விஜய் கோரிய நிலையில், அதே சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. முதல் தேர்தலிலேயே பொது சின்னத்துடன் விஜய்யின் தவெக களமிறங்குகிறது அரசியலில் மாற்றத்தை  ஏற்படுத்தும் ஒரு திருப்புமுனையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், வரும் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட கமல்ஹாசனின்  மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version