மிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நிரப்ப, தேடுதல் குழு பரிந்துரைத்துள்ள பட்டியலில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்து நியமிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன், அதுதொடர்பான வழக்கை மீண்டும் விசாரித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், வழக்கில் இறுதி முடிவு வரும் வரை புதிய துணைவேந்தர் நியமனங்கள் செய்யப்படமாட்டாது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருந்தது.

இந்த நிலையில், அந்தச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கும், பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நிரப்ப உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கக் கோரிய மற்றொரு வழக்கும் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் 15 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் இல்லாததால் கல்வி தொடர்பான கொள்கை முடிவுகள் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட நிர்வாகப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட உத்தரவாதம் காரணமாக துணைவேந்தர் நியமனங்கள் தாமதமாகியுள்ளதாகவும், இந்த நிலைக்கு தீர்வு காண தேடுதல் குழு பரிந்துரைத்துள்ள மூன்று பேரில் ஒருவரைத் தேர்வு செய்து நியமிக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், துணைவேந்தர் நியமன அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கிய சட்டத்தின் மீதான தடை ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளதால், அந்தச் சட்டம் தற்போது அமலில் இருப்பதாகவே கருதப்பட வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பு கோரிக்கை வைத்தது.

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்குகள் தொடர்பாக விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version