தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) இன்றுடன் (டிச. 11) நிறைவுடைகிறது.
கடந்த 2002ம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) நடைபெறுகிறது. கடந்த நவம்பர் மாதம் 4ம் தேதி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கின. வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கிட்டு ஒவ்வொரு வாக்காளருக்கும் படிவங்களை வழங்கினர். அந்த படிவங்களை பூர்த்தி செய்ததும் அவற்றை வாங்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் உடனுக்குடன் நடைபெற்றன. இறந்தவர்கள், இடம் மாறியவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, புதிதாக பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்தநிலையில், வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணிகள் இன்றுடன் (டிச. 11) நிறைவடைகின்றன. இதனையொட்டி, கணக்கீட்டு படிவங்களை பெற்ற வாக்காளர்கள் இன்று (டிச. 11) சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனிடையே நவம்பர் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்த SIR பணிகளின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 கோடியே 41 லட்சத்து 10 ஆயிரத்து 380 படிவங்கள், அதாவது 99.99 சதவீதம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகவும், 4,207 வாக்காளர்கள் மட்டுமே படிவங்களை பூர்த்தி செய்து தரவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 கோடியே 40 லட்சத்து 83 ஆயிரத்து 413 படிவங்கள் அதாவது 99.95 சதவீதம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. SIR பணிகள் இன்று (டிச. 11) நிறைவடைந்ததும் அதன் விவரங்களை அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்க உள்ளதாகவும், அவர்களும், தகுதியுள்ள வாக்காளர்கள் யாரும் விடுபட்டுவிடாதபடி ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
