வெக எம்.எல்..க்களை வளைக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட குதிரை பேரம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.

 அதே சமயம்  நீதிமன்றம் விதித்த நிபந்தனையின்படி, செந்தில் பாலாஜி தொடர்ந்து காவல் நிலையத்தில் ஆஜராகி வருகிறார். அதன்படி, அவர் நான்காவது நாளாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இன்று ஆஜராகி கையெழுத்திட்டார். அவரது சகோதரர் அசோக் குமார் இந்த வழக்கில் முதல் முறையாக காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

 பின்னர், இருவரையும் விசாரணை அதிகாரிகள் தனித்தனியாகவும், இணைத்தும் சுமார் இரண்டரை மணி நேரம் விசாரித்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 14 பேர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த வழக்கில் ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அதுதொடர்பான நிதி பரிவர்த்தனைகள் குறித்தும் போலீசார் விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணப் பரிமாற்ற விவரங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 விசாரணை நிறைவடைந்த பிறகு செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

 இதற்கிடையில், நீதிமன்ற நிபந்தனையின்படி இருவரும் மீண்டும் மாலை நேரத்திலும் காவல் நிலையத்தில் ஆஜராக உள்ளதாகவும், அப்போது கூடுதல் கேள்விகளை எழுப்பி விசாரணையை மேலும் தீவிரப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version