புதுச்சேரியில் டிசம்பர் 9ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் அனுமதி வழங்கி உள்ள அரசு, பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து தருவதாக உறுதி அளித்துள்ளது.

புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தவெக அரசிடம் அனுமதி கோரியது. தமிழ்நாட்டின் சாலைகளை விட புதுச்சேரி சாலைகள் சிறியவை எனக்கூறி புதுச்சேரி அரசு அனுமதி மறுத்தது. இதனையடுத்து பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தவெக கோரிக்கை வைத்தது. இதுகுறித்து அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு, சில நிபந்தனைகளுடன் தவெக பொதுக் கூட்டத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி அனுமதி வழங்கி உள்ளார்.

புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் டிசம்பர் 9ம் தேதி தவெக பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி தரப்பட்டுள்ளது. வழக்கமாக பொதுக் கூட்டத்திற்கு அமைக்கப்படும் மேடை தவெக பொதுக் கூட்டத்திற்கு அமைக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக பிரசார வாகனத்தில் நின்றபடியே விஜய் பேச உள்ளார். காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி  வரை பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் 45 நிமிடங்கள் விஜய் பேச உள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் QR கோடுடன் கூடிய அனுமதி அட்டை வழங்கப்பட உள்ளது. 10 கட்டங்களாக பிரித்து ஒவ்வொரு கட்டத்திற்கும் தலா ஆயிரம் பேர் வீதம் அமரும் வகையில் தடுப்பு கட்டைகளுடன் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து தருவதாக புதுச்சேரி அரசு உறுதி அளித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version