தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு அதிரடித் திருப்பமாக, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் முகமாகத் திகழ்ந்தவருமான கே.ஏ. செங்கோட்டையன், தற்போது ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ இணைந்து ஈரோடு மாவட்ட தேர்தல் களத்தை அதிர வைத்துள்ளார். அந்தியூர் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்வைத்த நேரடி விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. ஒரு காலத்தில் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவரே, இப்போது எடப்பாடிக்கு எதிராகக் களமிறங்கியிருப்பது ஈரோடு மாவட்ட அரசியலில் தவெக-விற்கான பலத்தை இருமடங்காக்கியுள்ளது.

அந்தியூர் பரப்புரையில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய செங்கோட்டையன், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு நடைபெற்ற அதிகாரப் போட்டிகளின் பின்னணியை முதன்முதலாகப் பகிரங்கப்படுத்தினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான்தான் முதலமைச்சர் ஆகி இருக்க வேண்டும். ராத்திரி வரைக்கும் நான்தான் அந்தப் பட்டியலில் இருந்தேன். ஆனால் காலையில் எல்லாம் மாறிப்போச்சு. காரணம், எடப்பாடி கையில் பணப்பெட்டி இருந்தது, என் கையில் பெட்டி இல்லை.

சசிகலா சிறைக்குச் செல்ல நேரிட்டபோது, அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் நான்தான் என்று அவரே உறுதி அளித்தார். ஆனால், திடீரென ஒரு மலைப்பாம்பைப் போல எடப்பாடி பழனிசாமி தரையில் நீந்தி வந்து விழுந்து, கெஞ்சிப் பதவியைப் பெற்றார். அன்று கட்சியைக் காக்க வேண்டும் என்பதற்காகவே நான் மௌனமாக இருந்தேன். ஆனால், இன்று எவ்வித நன்றியுணர்வும் இல்லாமல் என்னை யார் முதலமைச்சர் ஆக்குவது என அவர் பேசுவது விந்தையாக இருக்கிறது” எனத் தனது நீண்ட நாள் ஆதங்கத்தை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தினார்.

மேலும், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளை அவர் கையாண்ட விதம் குறித்தும் செங்கோட்டையன் அடுக்கடுக்கான புகார்களை வாசித்தார். பவானிசாகர் மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் மட்டும் சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான தொழிற்சாலைத் திட்டங்களில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், மொத்தமாக ரூ.50 லட்சம் கோடி வரை அவர் சம்பாதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். டிடிவி தினகரன், ஓபிஎஸ், பிரேமலதா விஜயகாந்த் தொடங்கித் தன்னைத் தூக்கிவிட்ட பாஜக மற்றும் அண்ணாமலை வரை அனைவரையும் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தித் தனிமைப்படுத்தி விட்டார் என்று அவர் சாடியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version