லைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை சீசன் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் முக்கிய நிகழ்வான 63-வது மலர் கண்காட்சி, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிரையண்ட் பூங்காவில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுற்றுலாத் துறையும் தோட்டக்கலைத் துறையும் இணைந்து ஒருங்கிணைத்துள்ள இக்கண்காட்சியைக் காண, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு கண்காட்சியின் சிறப்பம்சமாக, சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வண்ணமயமான கொய்மலர்களைக் கொண்டு பல்வேறு பிரம்மாண்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, திண்டுக்கல் நகரின் அடையாளமான ‘திண்டுக்கல் பூட்டு’, வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பாம்பன் பாலம்’, தமிழரின் கட்டிடக்கலைக்குச் சான்றான ‘தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய கோபுரம்’ மற்றும் வீர விளையாட்டான ‘ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது’ போன்ற மலர் உருவங்கள் காண்போரை வியக்க வைக்கின்றன. இது தவிர, பெண்கள் மேம்பாட்டை வலியுறுத்தும் உருவங்கள், நேரோட்டோ பொம்மை மற்றும் காதலர்களைக் கவரும் வகையில் ‘இரட்டை இதய செல்பி பாயிண்ட்’ எனப் பூங்கா முழுவதும் வண்ணக் கோலமாகத் காட்சியளிக்கிறது.

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகக் காலை வேளையில் வெப்பம் சற்று அதிகரித்து காணப்பட்டாலும், மாலை வேளையில் நிலவும் இதமான குளுமையான சூழல் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது. மேகக் கூட்டங்களுக்கு இடையே லேசான பனிமூட்டத்துடன் நிலவும் இந்த இதமான காலநிலையை அனுபவித்தபடி, சுற்றுலாப் பயணிகள் மலர் உருவங்கள் முன்பு நின்று ஆர்வத்துடன் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் நெகிழ்ச்சி

பூங்காவில் பூத்துக் குலுங்கும் ஆயிரக்கணக்கான மலர்ச் செடிகளும், அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரிய வகை மலர்களும் மனதிற்குப் புத்துணர்ச்சி அளிப்பதாகச் சுற்றுலாப் பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, பூங்காவை மேலிருந்து படம்பிடிக்கப்பட்ட ‘கழுகுப் பார்வை’ (Drone View) காட்சிகள், மலர் கண்காட்சியின் முழுமையான அழகைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன. விடுமுறை தினங்களை முன்னிட்டுப் பயணிகள் கூட்டம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்பதால், நகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version