இந்தியாவின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா சுப்ரமணி பொறுப்பேற்றுக்கொண்டார்
இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த அணில் சவுகான் மே 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதையொட்டி, புதிய தலைமை தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் ஓய்வு பெற்ற லெப்டினண்ட் ஜெனரலுமான ராஜா சுப்ரமணி பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றுடன் அணில் சவுகான் ஓய்வு பெற்றதையடுத்து புதிதாக முப்படைகளின் தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அவர் முப்படைகளின் ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

டில்லியில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் முன்னாள் மாணவரான ராஜா சுப்பிரமணி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வில் எம்.பில் பட்டம் பெற்றவராவார். இதன் பின்னர் டெல்லி மற்றும் லண்டனில் மேற்படிப்பு பயின்றுள்ளார். தேசிய பாதுகாப்பு கல்விக்கழகம் மற்றும் இந்திய ராணுவ கல்விக் கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்ற இவர், 1985ம் ஆண்டு டிசம்பரில் கார்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் பணியில் சேர்ந்தார்.
ராணுவத்தில் 37 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றியுள்ள ராஜாசுப்ரமணி, முன்னதாக, ஜூலை 1, 2024 முதல் ஜூலை 31, 2025 வரை ராணுவத் தலைமைத் துணைத் தளபதியாகப் பணியாற்றியுள்ளார். மார்ச் 2023 முதல் ஜூன் 2024 வரை மத்திய கட்டளைப் பிரிவின் தலைமைத் தளபதியாகவும் இருந்துள்ளார்.
2015 ஆம் ஆண்டில் என்.எஸ் ராஜா சுப்ரமணிக்கு விஷிஷ்ட் சேவா பதக்கமும், 2020 ஆம் ஆண்டில் அதி விஷிஷ்ட் சேவா பதக்கமும் வழங்கப்பட்டது. இதுபோக சேனா பதக்கத்தையும், பரம் விஷிஷ்ட் சேவா பதக்கத்தையும் அவர் பெற்றுள்ளார்.
இவரது பதவிக்காலம் டிசம்பர் 31, 2028 வரை தொடரும் என தெரிகிறது.
