இலங்கையின் கொழும்பு அருகே உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு அருகில் உள்ள கழுதாரா மாவட்டத்தின் அங்குருவாதொட்ட பகுதியில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற முதியவர்கள் தங்கியிருக்கும் இந்த இல்லத்தில் நேற்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் ஒரு பகுதியில் பிடித்த தீ, அடுத்தடுத்து மற்ற அறைகளுக்கும் அதிவேகமாகப் பரவியது.
தீ விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், உள்ளூர் மக்களின் உதவியோடு தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும், தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால் முதியவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் போனது. இதில் தீக்காயங்கள் ஏற்பட்டு 11 முதியவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மீட்புத்துறையினர் கட்டடத்திற்குள் அதிரடியாகப் புகுந்து, தீயில் சிக்கியிருந்த 51 பேரைப் பாதுகாப்பாக மீட்டனர். விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. மேலும் 9 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த முதியோர் இல்லத்தில் மொத்தம் 72 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்துக்கான சரியான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படும் நிலையில், போலீஸாரும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
