த.வெ.க எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேச்சு குறித்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு, எம். பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும், ஆளும் தவெக கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது தாங்கள் சொல்லும் படி நடந்து கொண்டால் சன்மானமாக 35 கோடி ரூபாய் வரை தருவதாக பேரம் பேசியதாக, ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என். இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூ-டியூபர் திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜின் சகோதரர் அசோக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், தவெக எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டு பேசியதாகவோ, பேரம் பேசியதாகவோ, மிரட்டல் விடுத்ததாகவோ முதல் தகவல் அறிக்கையில் தனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை. முன்னாள் அமைச்சரின் சகோதரர் என்ற காரணத்துக்காக அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரில் கூறப்பட்டுள்ள குற்றத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு, நீதிபதி சி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது.
இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் எம்.எல்.ஏ.-வும் சம்பந்தப்பட்டு இருப்பதால், மனுவை எம்.பி. எம்.எம்.ஏ-க்கள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் பட்டியலிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையேற்றுக்கொண்ட நீதிபதி குமரப்பன், சம்பந்தப்பட்ட நீதிபதி முன் பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அதன்படி, எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும்.
