தமிழகத்தில் முறையான அரசின் அனுமதியோ அல்லது பல்கலைக்கழக அங்கீகாரமோ இன்றி செயல்பட்டு வரும் சட்டவிரோத மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத படிப்புகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு களமிறங்கியுள்ளது.
மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், மருந்தியல், அலைடு ஹெல்த்கேர் முதல் ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் யோகா வரை பல்வேறு துறைகளில் உரிய அங்கீகாரமின்றி சில நிறுவனங்கள் செயல்படுவதாகவும், மாணவர்களிடம் பெரும் தொகையை வசூலித்து மோசடி செய்வதாகவும் புகார்கள் எழுந்தன. இத்தகைய செயல்கள் மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தைப் பாதிப்பதோடு, பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைவதால், இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.
புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள்: மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்து ஒரு கண்காணிப்பு கட்டமைப்பு உருவாக்கப்படும்.
பல்கலைக்கழகங்கள் தங்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ம் தேதி அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அங்கீகாரமற்ற நிறுவனம் குறித்த புகார் எழுந்தால், நிபுணர் குழு மூலம் உள்கட்டமைப்பு, கல்வி வசதிகள் மற்றும் அனுமதி குறித்த தீவிர விசாரணை நடத்தப்படும்.
விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், ‘பாரதிய நியாய சன்ஹிதா’ (Bharatiya Nyaya Sanhita) சட்டத்தின் கீழ் மோசடி மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்ததாகக் கூறி, காவல் துறையினருடன் இணைந்து அந்த நிறுவனம் மீது கிரிமினல் வழக்கு பாயும். மேலும், அந்நிறுவனம் உடனடியாக மூடப்படும்.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களும் தங்களின் அனுமதிச் சான்றுகளை வளாகத்திலும் இணையதளத்திலும் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும்.
மாணவர்கள் தாங்கள் சேரும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை அந்தந்த மருத்துவப் பல்கலைக்கழகங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
