தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு மின்வாரியம் (TNEB) மற்றும் சென்னை ஐஐடி (IIT Madras) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் ஐஐடி இயக்குநர் காமகோடி பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், மின்வாரியத்தில் புதிய தொழில்நுட்பங்கள், சர்வதேச தரத்திலான செயல்முறைகள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதற்காகவே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மின்வாரியத்தின் மூத்த பொறியாளர்களும், ஐஐடி நிபுணர்களும் இணைந்து மின் உற்பத்தி, மின் விநியோகம், சைபர் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்குவார்கள் என்றார்.

ஸ்மார்ட் மீட்டர் திட்டம் குறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், தொழில்நுட்ப ரீதியாக முழுமையான ஆய்வுக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் சில பகுதிகளில் ஏற்படும் மின்வெட்டு குறித்து கேட்கப்பட்டபோது, டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு குறைபாடுகளை சரிசெய்ய அதிக அளவில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நிரந்தர தீர்வுக்கு மின்வாரியத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியிருப்பதால் அதற்கு சிறிது காலம் ஆகும் என்றும் விளக்கமளித்தார்.
மேலும், இந்த ஆண்டு 15 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாகவும், அதில் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களும் அடங்கும் என்றும் தெரிவித்தார். மின்சாரத் துறையில் அனைத்து நிரந்தர பணியாளர் நியமனங்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.
மின்வாரியம் தொடர்பான வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றச்சாட்டு உறுதியானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
