கோபிசெட்டிபாளையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கீரிப்பள்ளம் ஓடையில் உள்ள அடைப்புகள் மற்றும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டன.
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, கொடியசைத்து இப்பணிகளைத் துவக்கி வைத்தார். ஈரோடு தனியார் மருத்துவமனையின் பங்களிப்புடன் இணைந்து இந்தத் தூர்வாரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியைத் துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,
நிரந்தர முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில், தமிழகம் இந்தியாவிற்கே ஒரு முன்னோடி மாநிலமாக திகழும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் சீரோடும் சிறப்போடும் நடைபெற்று வருகின்றன.
நிதி நெருக்கடி உள்ள சூழ்நிலையிலும் கூட, அதற்கான நிதிகளை எவ்வாறு திரட்டுவது என்று ஆராய்ந்து திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இது சம்பந்தமாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். ஆய்வுக் கூட்டம் மூலமாக ஒவ்வொரு துறை சார்பாக என்னன்னு திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமா அந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்கு ஆணையிட்டுள்ளார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு எழுச்சிமிக்க நிலையை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். வரலாற்றில் முதல் முறையாக, முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஐந்து ஆண்டு கால திட்டத்திற்காக 463 திட்டங்கள் அடங்கிய பக்கங்களை வெளியிட்டு, இந்தியாவில் யாரும் செய்திட முடியாத சாதனைகளைத் தமிழக அரசு படைத்து வருகிறது.
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே ஓடையைத் தூர்வாரி, ஆழப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஈரோடு தனியார் மருத்துவமனையின் பங்களிப்போடு துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த ஆட்சிக் காலத்திலேயே இப்பகுதியில் முதற்கட்டமாக 5 கோடி 20 லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. நகராட்சியின் முழு ஒத்துழைப்போடு இப்பணிகள் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.
கீரிப்பள்ளம் ஓடை தூர்வாரும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இதனை உடனடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, தேவையான நிதி ஒதுக்கீடு பெற்று விரைவில் நிரந்தரத் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
