குறு , சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை வளர்ச்சியை மேம்படுத்த புதிய திட்டங்களை வகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒருபடியாக எம்எஸ்எம்இ துறைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசகர்களை தேர்வு செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.
தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சிக்கான நீண்டகால செயல் திட்டத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக தமிழக அரசின் MSME துறையின் கீழ் செயல்படும் FaMeTN அமைப்பு, தொழில்துறை ஆலோசகர்களை நியமிப்பதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்துதல், மின்னணு, தோல், ஜவுளி, ஆட்டோமொபைல், மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட முக்கிய தொழில்துறைகளின் தற்போதைய நிலை ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் எதிர்கால வளர்ச்சிக்கான செயல்திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.
தொழில்துறைகளின் உற்பத்தித் திறனை உயர்த்துவது, தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துவது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, ஆராய்ச்சி மற்றும் புதுமையை ஊக்குவிப்பது, டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டை விரிவுபடுத்துவது, ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பது ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயல் திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை உலகளாவிய போட்டிக்குத் தயார்படுத்தி, முதலீடுகள், வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
