நீட் மறுதேர்வில் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12ஆம் இடமும் பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் மறு தேர்வு கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நீட் மறு தேர்வுக்கான முடிவுகளை நேற்று நள்ளிரவு தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. அதன்படி, இந்த ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வில் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் வேங்கடாபதி வேலாயுதம் என்பவர் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12ஆம் இடமும் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
இவர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவரான அஞ்சன் ராமச்சந்திரநாத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சென்னை பொன்னேரியில் உள்ள வேலம்மாள் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துள்ள வேங்கடாபதி வேலாயுதம், நீட் நுழைவு தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்களையும், கட் ஆப் அடிப்படையில் 99.99915 சதவீத மதிப்பெண்களையும் பெற்று தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12ஆம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
