உண்மை நிலை தெரியாததால், தமிழக வெற்றிக்கழக ஆட்சி கவிழும் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறியாமையில் பேசி வருவதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் சாடியுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக நிதி அமைச்சருமான மரிய வில்சன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வருகை தந்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தமிழக முதல்வர் 15 – 16 நாட்கள் ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர்களுடன் சுமார் ஆறு மணி நேரம், ஏழு மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. நிறைய தகவல்களை பரிமாறி உள்ளோம். அமைச்சரவை கூட்டம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. தமிழக வெற்றிக்கழக அரசு பதவி ஏற்று தமிழக அரசின் முதல் பட்ஜெட் நல்லபடியாக தாக்கல் செய்யப்படும்.
தமிழக வெற்றிக்கழக ஆட்சி கவிழும் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறியாமையில் பேசி வருகிறார். உண்மை நிலை அவருக்கு இன்னும் தெரியவில்லை .பாவம் அதனால் தான் அப்படி பேசிக் கொண்டிருக்கிறார்.
மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு மரியாதை கொடுப்பது மாதிரி தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் தெரியவில்லை, திமுக தலைமைக்கும் தெரியவில்லை. மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு முதலில் தலைவணங்க வேண்டும்.
தமிழக முதல்வரின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு 100% மக்கள் அனைவரும் வரவேற்கிறார்கள். 55 நாட்களில் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். மக்கள் வரவேற்பது போன்று அனைவரும் வரவேற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

பின்னர் புகழ் பெற்ற பனிமய மாதா ஆலயத்துக்கு அமைச்சர் மரிய வில்சன் சென்றார். அங்கு பனிமய மாதா முன்பு முழந்தாளிட்டும், அமர்ந்தும் உருக்கமாக வழிபாடு செய்தவர், பின்னர் மாதாவிற்கு மாலை அணிவித்தும் மெழுகுவர்த்தி ஏந்தியும் ஜெபம் செய்தார்.
