செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நோயாளிகளின் உறவினர்கள் அமர்வதற்காக மருத்துவமனை வளாகத்தில் தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்தப் பகுதியில் போதிய பராமரிப்பு இல்லாததால் மருத்துவக் கழிவுகள், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், நோயாளிகளின் உறவினர்கள் அமரும் பகுதியில் தெருநாய்கள் சுற்றித் திரிவதால், அங்கு வருபவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சமும் எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி, மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகிலுள்ள பள்ளத்தின் வழியாகச் செல்வதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் நலனை கருத்தில் கொண்டு, மக்கள் அமரும் பகுதியை உடனடியாக சுத்தம் செய்து, மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றுவதுடன், கழிவுநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
