கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின், ஏப்ரல் 18 ஆம் தேதி தனது முகநூலில் பிரசாரம் மேற்கொண்டதாக, மாணிக்கம் தாகூர் மீது விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மாணிக்கம் தாகூர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 188-வது சட்டப்பிரிவின் படி, அரசு ஊழியர் எழுத்துப்பூர்வ புகார் அளித்திருந்தால் மட்டுமே தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்ய முடியும் என்பதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மாணிக்கம் தாகூர் கோரிக்கையை ஏற்று, அவருக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதேபோல, திருநெல்வேலி மக்களவை தொகுதியில் 2024-ஆம் ஆண்டு தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திருநெல்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். திருநெல்வேலி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, நயினார் நாகேந்திரன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று, நயினார் நாகேந்திரன் மீதான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
