தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலகம் செல்லும் நுழைவுவாயில் உள்ள பகுதியில் சுற்றித்திரிந்த ஏராளமான தெருநாய்களை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சமீப காலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு தலைமைச் செயலகத்திலிருந்து அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் தெரு நாய் பிடிக்கும் பிரிவை சார்ந்த ஊழியர்கள் தலைமைச் செயலகம் முழுவதும் கடந்த 3,4 நாட்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்துள்ளனர்.
இதில் இன்று முதலமைச்சர் அலுவலகம் செல்லும் நுழைவு வாயில் பகுதியில் சுற்றித்திரிந்த சுமார் 6-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் வலை விரித்து பிடித்தனர்.
தலைமைச் செயலகத்தில் வரும் 5ஆம் தேதி முதல் பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து மானிய கோரிக்கையும் நடைபெற உள்ளது. இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் வந்து செல்லும் இடம் என்பதால் தலைமைச் செயலகம் முழுவதும் உள்ள நாய்களை பிடித்து செல்வதாக ஊழியர்கள் கூறினர்.
மேலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பிறகு மீண்டும் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்து முடிக்கப்பட்ட பிறகு நாய்களை எங்கு பிடித்தோமோ அங்கேயே விட வேண்டும் என்று சட்டம் உள்ளதால் இந்த நடைமுறை இங்கிருந்து பிடித்து செல்லும் நாய்களுக்கும் பொருந்தும் என்று ஊழியர்கள் கூறினர்.
இதனால் தலைமைச் செயலகத்தில் மனு கொடுக்க வரும் பொதுமக்களும் ஊழியர்களும் சிறிது அளவு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
பிடிக்கப்பட்ட அனைத்து நாய்களும் 10 எண் கொண்ட வாயிலில் வாகனம் வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு தெருநாய்க்கும் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு ஒரு டெம்போ வாகனத்தில் அனைத்து நாய்களையும் நாய்கள் அரசு காப்பகத்திற்கு சென்னை மாநகராட்சியின் நாய் பிடிக்கும் ஊழியர்கள் கொண்டு சென்றனர்.
