நாகர்கோவிலில் தனியார் அமைப்பு சார்பில் சமூக நலத்திட்ட உதவிகளை இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் வழங்கினார்.
நாகர்கோவில் ரவுண்ட் டேபிள் 176 மற்றும் நாகர்கோவில் லேடீஸ் சர்க்கிள் 196 ஆகிய அமைப்புகள் இணைந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை நடத்தியது.
தனியார் திருமண மண்டபத்தில் Apex Laboratories நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகத் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியன் (Magesh Raj Pasilian) கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் ‘ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்’ (Sree Balaji Orthotics) நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்களை மாற்றுத்திறனாளிகளுக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் வழங்கினார். இதேபோல் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 5 பெண்களுக்கு மின்சார ஆட்டோக்கள் (E-Autos) வழங்கப்பட்டன.
சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், சமூக நலன் மற்றும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது.
