தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக, இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றாலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியை தழுவினார். இந்தநிலையில் தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் இருந்த ‘தமிழக முதலமைச்சர்’ என்ற அடையாளத்தை அதிரடியாக நீக்கியுள்ளார். தற்போது ‘திமுக தலைவர்’ என்று மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ள நிலையில், அவர் தனது பதவியை முறைப்படி ராஜினாமா செய்யத் தயாராகிவிட்டார்.
நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஒரு புதிய அரசியல் சூழல் நிலவுகிறது. தற்போது காபந்து முதலமைச்சராகத் தொடர்ந்து வரும் மு.க.ஸ்டாலின், கேரளாவிலிருந்து சென்னை திரும்பும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் அலுவலகம் தரப்பில் இருந்து வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக திமுக வட்டாரங்கள் காத்திருக்கின்றன.
கேரளாவில் புதிய அரசு அமைவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக ஆளுநரின் வருகை தள்ளிப்போயுள்ளது. அவர் சென்னை வந்தடைந்ததும், திமுக தலைவர் தனது பதவியிலிருந்து விலகி, தேர்தல் முடிவுகளுக்குப் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது. இதன் மூலம் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
