கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி, த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 41 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த சம்பவம்.
41 பேர் உயிரிழந்ததற்கு விஜய்யின் தாமதம் தான் காரணம், அப்போதைய திமுக அரசின் சூழ்ச்சி தான் காரணம் என பல காரணங்கள் ஒவ்வொருவராலும் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக பல வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் தொடரப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், விசாரணையை உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய்ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்பு குழு மேற்பார்வையிடும் என்றும் உத்தரவிட்டது.
இதற்கிடையே கடந்த 2-ந்தேதி நடைபெற்ற தவெக இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, காவல்துறையை வைத்துக்கொண்டு கரூர் மக்களை கொன்று குவித்தீர்களே ஸ்டாலின் சார். கரூரில் எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு உள்ளது. அதை முடிக்காமல் விட மாட்டோம் என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சமீபத்தில் பேசிய பேச்சு வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பாதிக்கும் நோக்கத்துடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே, அவர் மீது உரிய புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.
இத்தகைய நடவடிக்கைகள் சி.பி.ஐ. விசாரணையை பாதிக்கக்கூடும் என்பதால், இது போன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பு சி.பி.ஐ.யின் அனுமதி பெறும் வகையில் உரிய வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வகுக்க வேண்டும். அத்துடன், சி.பி.ஐ. விசாரணை நிறைவடையும் வரை கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, புஸ்சி ஆனந்த், சி.டி.நிர்மல் குமார் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த இடையீட்டு மனுவில் கோரப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றது. ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிரான வழக்கை நாளை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
