காவிரி நதி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) டெல்லியில் நடைபெற உள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இதில், தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் பங்கேற்க உள்ளனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மாதாந்திர நீர் பங்கீட்டை உறுதி செய்வது இந்தக் கூட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.
இருப்பினும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கர்நாடக அரசு நீண்டகாலமாகத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக கர்நாடக முதல்வர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். இருப்பினும், மேகதாது அணை விவகாரம் தமிழகத்தின் உரிமையைப் பாதிக்கும் என்று கருதும் தமிழக அரசு, இதற்குத் தொடர்ச்சியாகத் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது.
அதாவது, மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் அபாயம் உள்ளதாக தமிழக அரசு எச்சரித்துள்ளது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த காலங்களிலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு வழக்குகளைத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டம், தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரைப் பெறுவதிலும், மேகதாது விவகாரத்தில் ஒருமித்த முடிவுகளை எடுப்பதிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத்திற்கான நீர் பங்கீட்டை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும் என்ற தமிழகத்தின் எதிர்பார்ப்பு இந்தக் கூட்டத்தில் மீண்டும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில், காவிரி விவகாரத்தில் தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக, தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய், மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிராகத் தனித்தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். இந்தத் தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
