கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவியை சமூக வலைதளங்கள் மூலம் ஏமாற்றி, அவரது தனிப்பட்ட வீடியோக்களை பதிவு செய்து பணம் பறிக்க முயன்ற இரு இளைஞர்களை போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.
பெண்கள் விடுதியில் தங்கி கல்வி பயிலும் மாணவி, இன்ஸ்டாகிராம் மூலம் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞருடன் பழகத் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் நட்பு ரீதியாக நடந்து கொண்ட அவர், மாணவியின் நம்பிக்கையைப் பெற்று நெருக்கமாக பழகியுள்ளார். பின்னர் தனது நண்பரான சந்தோஷையும் அறிமுகப்படுத்தி, பல்வேறு காரணங்களை கூறி மாணவியிடம் நம்பிக்கை ஏற்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
காலப்போக்கில் இருவரும் மாணவியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, காதல் உணர்வுகளை வெளிப்படுத்தியதுடன், வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மூலம் நெருக்கத்தை அதிகரித்துள்ளனர். இதன் பின்னர் மாணவியை ஏமாற்றி, அவரது தனிப்பட்ட மற்றும் ஆபாச காட்சிகளை ரகசியமாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, மாணவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இந்த மிரட்டலால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, மனவேதனையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவியின் நிலையை கவனித்த விடுதியில் தங்கியிருந்த ஒரு பெண்மணி, அவரிடம் விசாரித்தபோது முழு விவரமும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய போலீசார், சிறப்பு குழுவை அமைத்து மேச்சேரி பகுதியில் தேடுதல் நடத்தி, அருணாச்சலம் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதியானதைத் தொடர்ந்து, இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத நபர்களுடன் பழகும்போது இளம் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் காட்சிகளை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
