தமிழகத்தில் 2 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் பார் வசதியுடன் செயல்படுகின்றன. இந்த பார்களை நடத்த டெண்டர் மூலம் ஒப்பந்தம் பெற்று தனிநபர்கள் நடத்தி வருகின்றன. அதன்படி, கடந்த 2023-ம் ஆண்டு கடைசியாக பார்களுக்கான டெண்டர் விடப்பட்டு, அதன் ஒப்பந்தக் காலம் கடந்த ஆண்டு டிச.31-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, புதிய டெண்டர் விடப்படாமல், ஒப்பந்தக் காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அந்த கால நீட்டிப்பும் கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள பார்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மத்தியில் நிலவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், டெண்டர் காலத்தை நீட்டிப்பது குறித்த முக்கிய ஆலோசனை இன்று நடைபெற உள்ளது.
இது தொடர்பாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் வாரிய உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் பழைய ஒப்பந்த காலம் முடிவுக்கு வந்த நிலையில், புதிய டெண்டர் விடுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக தற்போதைய பார்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இடைப்பட்ட காலத்தில் பார்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு எத்தனை நாட்கள் கால அவகாசம் வழங்கலாம் என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. ஆலோசனையின் முடிவில், டெண்டர் கால நீட்டிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
