முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டை மறைத்து மூடப் பட்டிருந்த வலையை சேதப்படுத்தியாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையை அடுத்த நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் இத்திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகை 2024-ஆண்டு பிப்ரவரியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதற்கான கல்வெட்டில் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த ஜூலை 6-ஆம் தேதி நெம்மேலிக்கு சென்று இத்திட்டத்தை தமிழக முதல்வர் விஜய் பார்வையிட்டார். அப்போது, பராமரிப்பு பணி நடப்பதாகக் கூறி ஸ்டாலினின் பெயர் பொறிக்கப் பட்டிருந்த கல்வெட்டு வலையால் மறைக்கப்பட்டிருந்தது. இந்த வலையைச் சேதப்படுத்தி பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக திருப்போரூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ எல்.இதயவர்மன் உள்ளிட்ட இருவர் மீது மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இதயவர்மன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இச்சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரம் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வீடியோவை பார்த்த நீதிபதி, முன்னாள் எம்எல்ஏவாகவும், தற்போது பஞ்சாயத்து யூனியன் சேர்மனாகவும் இருக்கும் மனுதாரர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினார். பின்னர் வழக்கை ரத்து செய்யக் கோரிய இதயவர்மனின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான இறுதி அறிக்கையை 12 வாரங்களிவ் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
