இந்தியாவின் கிழக்கு லடா பகுதியில் சுமார் 13,000 அடி உயரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முத்-நியோமா விமானப்படை நிலையத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது. கடந்த நவம்பர் (12- 13ஆம் தேதி) 2025, அன்று விமானப்படை தலைவர் மார்ஷல் ஏபி சிங் C-130J சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானத்தின் தொடக்க தரையிறக்கத்தை நிகழ்த்தினார். இந்த விமானப்படை நிலையம் இந்திய – சைனா எல்லைக்கோட்டில் இருந்து வெறும் 25 முதல் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுமார் 2.7 கிலோமீட்டர் ஓடுபாதையை கொண்ட இந்த விமானப்படை நிலையம் உலக அளவில் ஒரு சிறந்த விமானப்படை நிலையமாக பார்க்கப்படுகிறது. இது நவீன செயல்பாட்டு உள்கட்டமைப்பிற்குப் பயன்படுத்தப்படலாம். அதுமட்டுமின்றி போர் ஜெட் பயணங்கள், கனரக-தூக்கும் போக்குவரத்து நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு விமானங்களை இந்த விமானப்படை நிலையத்தில் நம்மால் சுலபமாக இயக்க முடியும்.
சுமார் 218 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த விமானப்படை நிலையம் உலகின் மிக உயரமான செயல்பாட்டு போர் விமானத் தளமாக கருதப்படுகிறது. இதை ஒரு பொறியியல் அற்புதம் என்று வல்லுநர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
இந்த விமானப்படை நிலையத்தின் கட்டுமான பணியின் பொழுது -30°C முதல் -35°C வரை வெப்பநிலை குறைந்ததால், BRO (எல்லை சாலை அமைப்பு) பொறியாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர் . சிரமங்கள் இருந்தபோதிலும், இந்த திட்டம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கப்பட்டது. இவ்வளவு சிரமத்திலும் உலகின் மிக உயரமான போர் விமான தளத்தை கட்டி முடித்ததில் இந்தியாவுக்கு எப்பொழுதும் ஒரு தனிப் பெயர் நிலைத்திருக்கும்.
