மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்து, வாக்கு எண்ணிக்கைக்காகக் காத்திருக்கும் நிலையில், அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் (Strong Rooms) முறைகேடுகள் மற்றும் தில்லுமுல்லுகள் செய்யப்படுவதாக எழுந்த புகார்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
இந்தச் சூழலில், வாக்கு எண்ணிக்கை அமைதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (மே 2 சனிக்கிழமை) அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, மேற்கு வங்க மாநிலத்திற்கு என கூடுதலாக 165 வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களையும் (Counting Observers), பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைக் கண்காணிக்க 77 காவல்துறை பார்வையாளர்களையும் (Police Observers) நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முறைகேடு புகார்கள் எழுந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இது தொடர்பாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது நடைபெற்று வரும் 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றியுள்ள பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கு நிலையை கண்காணிக்கவும், கூடுதலாக 165 வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களும் 77 காவல்துறை பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பணியமர்த்தப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்களுக்குத் துணையாக இருப்பதற்கும், பாதுகாப்பான, அமைதியான, அச்சுறுத்தலற்ற மற்றும் வெளிப்படையான வாக்கு எண்ணிக்கை செயல்முறையை உறுதி செய்வதற்கும், இந்த கூடுதல் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்களும் காவல் துறை மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 324-வது பிரிவின் கீழும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் கீழும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இந்த நியமனங்களின்போது, அனைத்து மேற்பார்வையாளர்களும் ஆணையத்திற்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்; மேலும், ஆணையத்தின் கட்டுப்பாடு மற்றும் தலைமையின் கீழ் அவர்கள் செயல்படுவார்கள்.
