தெலங்கானாவில் கிராமம் ஒன்றில் பஞ்சாயத்து தலைவரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக 500 நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவின் காமரெட்டி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில்200 தெருநாய்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் கொல்லப்பட்ட நாய்களின் எண்ணிக்கை சுமார் 500 ஆக உயர்ந்துள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அதாவது, தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்துவதற்காக, சமீபத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துத் தேர்தல்களின் போது “கிராம மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக”, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்த சம்பவத்தை செய்ய உத்தரவிட்டதாக கிராம வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக, ஐந்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், அனுமக்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஷயம்பேட்டை மற்றும் அரேபள்ளி கிராமங்களில் சுமார் 300 தெரு நாய்களை கொன்றதாக கூறப்படும் சம்பவத்தில், இரண்டு பெண் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களது கணவர்கள் உட்பட மொத்தம் ஒன்பது பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
