NDA கூட்டணியில் அமமுக இணைய வேண்டும் என்பது நயினார் நாகேந்திரனின் விருப்பம் மட்டுமே, அது குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை என டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் கூட்டணிகளை அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்தவகையில், பாஜக அதிமுகவினருக்கு ஓரணியில் இணைய விருப்பம் காட்டுவது குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த சூழலில் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று அமித்ஷாவையும் சந்தித்து பேசினார்.
இப்படியிருக்கையில் ஒருபுறம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தமிழக வெற்றி கழகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. மறுபுறம் தினகரனை கட்சிக்குள் இழுக்கவேண்டும் என்று பாஜகவும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கூட்டணிக் கலந்துரையாடல்களுக்கு தன்னைச் சுற்றி எழும் ஊகங்களுக்கு தெளிவான பதில்களை டிடிவி தினகரன் வழங்கியுள்ளார். தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், NDA கூட்டணியில் அமமுக இணைய வேண்டும் என்பது நயினார் நாகேந்திரனின் விருப்பம் மட்டுமே, அதுகுறித்து தற்போது வரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.
கூட்டணி குறித்து டிசம்பர். 31ம் தேதி முடிவெடுக்க நினைத்ததாகவும், ஆனால் தற்போது பிப்ரவரி மாதம் வரை ஒத்திவைத்துள்ளதாகவும் கூறினார். அதன்படி, வரும் பிப்ரவரி 23-ம் தேதி எங்கள் கூட்டணி குறித்த விவரத்தை உறுதியாகத் தெரிவிப்பேன் என்று குறிப்பிட்டுள்ள தினகரன், அமமுக இடம்பெறும் கூட்டணிதான் இந்த தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறும். இதை அதீத நம்பிக்கையில் கூறவில்லை. தற்போதைய அரசியல் நிலவரத்தில் நான்கு முனை போட்டி நடைபெறுகிறது. இதை முழுமையாகத் தெரிந்து இதைத் தெரிவிக்கிறேன் என்று கூறினார். அண்மையில், முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி, திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி குறித்து பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் என்பது வேறு. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்கள் என்பது வேறு. அதனால் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சட்டமன்றத் தேர்தலில் பாதிக்காது என்றுதான் கூறுவார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
