முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டார். ஒருவேளை அவர் விஜய்யுடன் இணைய வாய்ப்புள்ளதோ என அரசியல் வட்டாரத்தில் பேச்சுவார்த்தைகள் எழுந்த நிலையில், இன்று ஒரே நாளில் இருமுறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
10 நாட்கள் ஓய்வுக்கு பிறகு தலைமை செயலகம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக இன்று காலை வழக்கம் போல சென்னை அடையாறு பூங்காவில் நடைபயிற்சி சென்ற முதலமைச்சரை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்ததாக கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து மாலை மீண்டும் முதலமைச்சரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம்,
”அரசியல் நிமித்தமாக முதலமைச்சரை சந்திக்கவில்லை. அவரது உடல் நலனை விசாரிக்க மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை. தமிழகத்திற்கு கல்வி நிதி தராததால் மத்திய பா.ஜ.க. அரசு மீது எனக்கு வருத்தம் உள்ளது. அரசியலில் எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. தேர்தலில் ஒன்று சேர்ந்துள்ள பா.ஜ.க. – அ.தி.மு.க.வுக்கு வாழ்த்துக்கள். விஜய்யுடன் நானும் பேசவில்லை; அவரும் என்னுடன் பேசவில்லை” என்றார்.