தமிழக அரசியலில் தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய கூட்டணி மற்றும் ஆட்சி அமைப்பு தொடர்பான ஆலோசனைகள் தீவிரமடைந்து வருகின்றன. பெரும்பான்மை எண்ணிக்கையை எந்தக் கட்சியும் தனித்து எட்டாத நிலையில், திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு குறித்து பல்வேறு அரசியல் வட்டாரங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக தரப்பில் இருந்து விஜயின் டிவிகேக்கு ஆதரவு வழங்குவது குறித்தும் ஆலோசனைகள் நடந்ததாக கூறப்படுகிறது.

 இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில்  சந்தித்த பின்னர், முன்னாள் அமைச்சர்  செம்மலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “அதிமுகவின் அடுத்தகட்ட முடிவை பொதுச்செயலாளர் தான் அறிவிப்பார். அவர் எடுக்கும் முடிவு இறுதியும் நல்லதுமானதாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், “எங்கள் தலைவர் தான் கிங்; அவர் கிங் மேக்கர் அல்ல, அவரே கிங் என்றும் கூறினார்.

அதேபோல், “தொகுதிகள் குறைந்திருக்கலாம். ஆனால் அதிமுகவின் வாக்கு வங்கி குறையவில்லை. கட்சி ஒரு கோடியே 33 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளது. முந்தைய தேர்தலின் வாக்குச் சதவீதத்தையும் தக்க வைத்துள்ளது என அவர் கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த செம்மலை, “எங்களது எம்.எல்.ஏ.க்கள் அவசியத்திற்காகவே இங்கே உள்ளனர். எந்த பேரத்திற்கும் அவர்கள் விலை போகமாட்டார்கள் என்று உறுதியாக தெரிவித்தார். மேலும், அதிமுக – திமுக கூட்டணி குறித்த கேள்விக்கும், எந்த முடிவாக இருந்தாலும் எங்கள் பொதுச்செயலாளர் எடுப்பார்; அது நல்ல முடிவாக இருக்கும் என்று கூறினார்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version