ஒரே நாளில் இருமுறை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் தனது பணிகளை தொடங்கியுள்ளார். 10 நாட்களுக்கு பிறகு தலைமை செயலகம் வந்த அவர், பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாறு பூங்காவில் நடைபயிற்சி சென்ற போது, அவரை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். அப்போது அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக கூறப்பட்டது.

முன்னதாக தனது ஆதரவாளர்களுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு பாஜக கூட்டணியில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தார் ஓ.பன்னீர்செல்வம். செய்தியாளர்களை சந்தித்த அவரது ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், திமுகவை வீழ்த்துவது எங்கள் இலக்கு அல்ல என்று கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு வருகை தந்த ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அவருடன் முன்னாள் எம்.பி., கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version