நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மற்றும் இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில் திருப்பூரில் நடைபெற்ற போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி மற்றும் தாக்குதலை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் மாணவர் அமைப்புகள் திருப்பூர் ரயில் நிலையம் அருகே இருந்து பேரணியாக புறப்பட்டு தலைமை தபால் நிலைய அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
போராட்டத்தின் போது, மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவபொம்மையை எரித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக தீயை அணைத்து, உருவபொம்மையை அப்புறப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, தலைமை தபால் நிலையம் முன்பு மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, ஒன்றிய அரசுக்கு எதிராகவும், தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர். டெல்லியில் போராடிய மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி, தமிழக அரசையும் தமிழக காவல்துறையையும் கண்டித்தும் முழக்கமிட்டனர்.
போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது சில மாணவர்களை சாலையில் இழுத்துச் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றிய காட்சிகள் அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
