சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் இன்று (30.04.2026) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதன்முறையாக  களம் கண்டது. எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதைத் தவிர்த்து, மொத்தமுள்ள 233 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் போட்டியிட்டார். தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜய் தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (30.04.2026) பிற்பகல் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அனைத்து வேட்பாளர்களும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்ட ’17C’ ஒரிஜினல் படிவத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

17C என்பது, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் அடங்கிய படிவம் ஆகும். இது தேர்தல் அலுவலர் மூலம் வேட்பாளர்களிடம் வழங்கப்படுகிறது. இந்த படிவம் தேர்தலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனையில் தொகுதி வாரியாக கட்சியின் வெற்றி வாய்ப்புகள், மேற்கொள்ள வேண்டிய கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version