ஒட்டன்சத்திரம் அருகே அருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 11 நண்பர்கள் நேற்று மாலை ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்குள் அனுமதியின்றி சென்றுள்ளனர். அப்போது ஆதில், சதாம் உசேன், ஆயாஸ் மற்றும் பயாஸ் ஆகிய 4 இளைஞர்கள் அருவியில் குளிக்கும் போது நீரில் மூழ்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் இளைஞர்களின் உடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று இரவு நேரம் ஆகிவிட்டதாலும், அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

​இந்த நிலையில், இன்று காலை தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஒன்றிணைந்து தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தினர். இதில் முதற்கட்டமாக 3 இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான மற்ற ஒருவரை தேடும் பணி போர் கால அடிப்படையில் தற்போதும் தொடர்ந்து வருகிறது.

இதனிடையே, உயிரிழந்த இளைஞர்கள் அருவிக்குச் செல்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு தங்களது செல்போனில் எடுத்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version