தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளுக்கு வழங்கப்படும் ஓஆர்எஸ் (ORS) கரைசல்கள் குறித்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை இணைந்து முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளன.
வயிற்றுப்போக்கு அல்லது வாந்தியால் உடலில் நீர்ச்சத்து குறையும் போது, உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட ‘ORS’ பொடிகளை மட்டுமே மருந்தகங்கள் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், ‘ORSL’ அல்லது ‘ORS Fit’ போன்ற பழச்சாறு சார்ந்த பானங்களை மருந்து எனக் கூறி விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பொதுமக்களிடம் விற்பனை மேற்கொள்ளும் போது, எது மருத்துவ ரீதியான ஓஆர்எஸ் கரைசல் மற்றும் எது உணவு பாதுகாப்புத் துறையின் (FSSAI) கீழ் வரும் பானம் என்பதைத் தெளிவாக விளக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்றது எனத் தவறான தகவலைக் கூறி ‘ORSL’ போன்ற பானங்களை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் போது, பாக்கெட்டின் மீது ‘WHO Recommended Formula’ என்று அச்சிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எந்தவொரு பானத்தை வாங்கும் போதும் அதன் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு இடம், காலாவதி தேதி மற்றும் உரிம எண்கள் சரியாக உள்ளதா எனச் சரிபார்ப்பது அவசியம். இந்த இரண்டுக்கும் இடையேயான வித்தியாசத்தைப் பொதுமக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறும் விற்பனையாளர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை பாயும் என்றும் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
