வீட்டுமனை ஒப்புதல் ரசீது வழங்க 7 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக திருவாருர் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையின் போது உதவியாளர் சுரேஷ்குமார் அலுவலக 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம், கீழகாவாதுகுடி பகுதியைச் சேர்ந்த பாரதிதாசன், தனது வீட்டுமனைக்கு அனுமதி பெறுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது அலுவலகத்தில் பணியாற்றி வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அவரது உதவியாளர் சுரேஷ்குமார் ஆகியோர் வீட்டுமனை ஒப்புதல் ரசீது வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினரிடம் பாரதிதாசன் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய ரூ.7 ஆயிரத்தை பாரதிதாசனிடம் வழங்கியதை வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கொடுத்துள்ளார். அலுவலகப் பகுதியில் லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையிலான காவல்துறையினர் திடீரென உள்ளே நுழைந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அவரது உதவியாளர் சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அப்போது திடீரென வட்டார வளர்ச்சி அலுவலரின் உதவியாளர் சுரேஷ்குமார் அலுவலகத்தின் மூன்றாவது மாடிக்கு அவசர அவசரமாக ஏறிச் சென்று தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் அங்கிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த சுரேஷ்குமாரை சக ஊழியர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சுரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். லஞ்சப் புகார் தொடர்பான விசாரணையின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் உதவியாளர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
