தமிழ்நாட்டின் அறுவடை திருநாளான, தைப் பொங்கல் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகையும், நாளை காணும் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படுகின்றன.
மாட்டுப் பொங்கல் தினமான இன்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் மாடுகள், கால்நடைகளை குளிப்பாட்டி, வழிபாடு செய்வார்கள். விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பெரும் சொத்தமாக கருதப்படும் மாடுகளை போற்றிப் பாதுகாக்கும் நாளாக மாட்டுப் பொங்கல் தினம் உள்ளது. மாடுகள் இல்லாதவர்கள் கூட இன்று மாடுகளை தேடிச் சென்று உணவளித்து மகிழ்வார்கள்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமானவை. அந்த வகையில், நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சீரும் சிறப்புமாக நடத்தப்பட்டது. 22 காளைகளை பிடித்து வலையங்குளம் பாலமுருகன் முதலிடத்தை பிடித்தார், இவருக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்பட்டது. 17 காளைகளை பிடித்த அவனியாபுரம் கார்த்தி 2வது இடத்தையும், 16 காளைகளை பிடித்த ரஞ்சித்குமார் என்பவர் 3வது இடத்தையும் பிடித்தனர். மேலும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த விருமாண்டி பிரதர்ஸின் காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மதுரையில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு அவற்றிற்கு தங்க நாணயம், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து வாடிவாசலிலிருந்து வெளியே வந்த காளைகளை, காளையர்கள் தழுவி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து, உதயநிதி, அவருடன் நடிகர் சூரி உள்ளிட்டோர் கண்டு ரசித்து வருகின்றனர்.
