மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திடும் வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அன்போடு வரவேற்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பதிவில், “தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட,

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை_மீட்போம் என்று பதிவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் பதில் ட்வீட் போட்டுள்ளார்.

https://x.com/TTVDhinakaran/status/2013880623858098407

அவரது பதிவில், தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம். கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version