திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு விஸ்வேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 213 ஏக்கர் நிலத்தை தனிநபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை தனிநபர்களின் பெயரில் பதிவு செய்ய முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறி, கோயில் செயல் அலுவலர் ஏற்கனவே திருப்பூர் சார் பதிவாளருக்கு கடிதம் அனுப்பி, எந்தவித பத்திரப்பதிவும் மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தார்.

இந்தக் கடிதத்தை எதிர்த்து ஏ.ஆர். சண்முகசுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கோயில் செயல் அலுவலர் அனுப்பியிருந்த கடிதத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணையின் முடிவில், கோயில் செயல் அலுவலர் திருப்பூர் சார் பதிவாளருக்கு அனுப்பியிருந்த கடிதம் சட்டப்பூர்வமானது என்றும், கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை தனிநபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், விஸ்வேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 213 ஏக்கர் நிலம் தொடர்பாக எந்தவித பதிவும் மேற்கொள்ளக் கூடாது என சார் பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தி இந்தத் தீர்ப்பு மூலம், கோயிலுக்கு சொந்தமான 213 ஏக்கர் நிலம் தனிநபர் கைகளில் செல்வதில் இருந்து தப்பி உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version