“முறையான அனுமதி சீட்டு இல்லாமல் ஒரு செங்கல் கூட வெளியே போகக்கூடாது. மீறி சென்றால் பறிமுதல் செய்துவிடுவேன்” என செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு சேலம் கனிமவளத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் அயோத்தியாபட்டினம் அடுத்த குள்ளம்பட்டி பகுதியில், எவ்வித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாகப் பாறைகள் உடைக்கப்பட்டு, மண்ணும் வெட்டி எடுக்கப்படுவதாகக் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அதிகாரிகள் குறிப்பிட்ட பகுதிக்கு நேரில் சென்று அதிரடி சோதனையில் இறங்கினர்.
அப்போது, அங்கு அனுமதியின்றி பல டன் கணக்கில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், முறையான ஆவணங்கள் இன்றி மலை போலக் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணின் மதிப்பை அதிகாரிகள் அளவீடு செய்து ஆய்வு செய்தனர். இதன் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சோதனையின் போது, அந்தப் பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த மூன்று செங்கல் சூளைகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உரிய பர்மிட் உள்ளதா என அதிகாரிகள் கேட்டதற்கு, “முன்பு ஒருமுறை மட்டுமே அனுமதி வாங்கினோம், அதன் பிறகு வாங்கவில்லை” என சூளைத் தரப்பில் மழுப்பலாகப் பதிலளித்துள்ளனர்.
இதையடுத்து, வாழப்பாடி தாசில்தார் முன்னிலையில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட அந்த 3 செங்கல் சூளைகளுக்கும் உடனடியாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அங்கு விதிகளை மீறிக் குவிக்கப்பட்டிருந்த மண்ணை அளவீடு செய்து, அதற்கான அபராதத் தொகையை விதிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இனிமேல் உரிய அனுமதி பெற்ற பின்னரே செங்கல் தயாரிக்க வேண்டும், மண் எடுக்க வேண்டும் என கறாராகக் கூறிய கனிமவளத்துறை அதிகாரி, தடையை மீறி வாகனங்கள் வெளியேறினால் கடுமையான நடவடிக்கை பாயும் என எச்சரித்தார். அதிகாரிகளின் இந்த திடீர் ஆக்சனால் அந்தப் பகுதியில் உள்ள சட்டவிரோத கும்பல் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது.
