தமிழக தலைமை செயலாளராக சாய்குமாரை நியமித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த வீராசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில், ஏப்ரல் 8ஆம் தேதி தமிழக தலைமை செயலாளர் முருகானந்தத்தை மாற்றிவிட்டு, சாய்குமார் என்பவரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவிவகித்த காலத்தில் அவரின் செயலாளராகப் பணியாற்றியவர் சாய்குமார்.
எனவே அவர் எப்படி நடுநிலைமையுடன் செயல்படுவார் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுவை அது பரிசீலிக்கவில்லை. எனவே தலைமை செயலாளராக சாய்குமாரை நியமித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, , பணி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பொது நல வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
