உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தமாக 54 பேர் காயமடைந்தனர்.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நடைபெற்றது. காலையில் 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் வாடிவாசல் வழியாக ஒவ்வொரு சுற்றுக்கும் சுமார் 100 காளைகள் வீதம் அவிழ்ந்து விடப்பட்டன. வாடிவாசலில் சீறி பாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்கினர். இதில் சிலரது காளை மாடுபிடி வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் வெற்றிப்பெற்றது.
இந்த நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் 10வது சுற்று முடிவில் மாடுபிடி வீரர்கள் 27 பேரும், காளைகளின் உரிமையாளர்கள் 20 பேரும், பாவையாளர்கள் 7 பேரும் என மொத்தமாக 54 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த 8 வீரர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மடுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் சுமார் 1,100 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களம் கண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
