ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருந்த படம் ‘ஜனநாயகன்’. தணிக்கையில் ஏற்பட்ட பிரச்சினையினால் தற்போது இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருக்கிறது. ஆனால், பொங்கல் வெளியீடு சாத்தியமில்லை என்பது மட்டும் உறுதியாகிவிட்டதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சென்சார் சான்றிதழ் வழங்க கோரி படக்குழு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட இருந்தது. ஆனால் வழக்கு தற்போது பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், விசாரணை நாளை நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது, மேலும், வழக்கை முடித்த கையோடு, விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய கேவிஎன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் படத்திற்கு ஆதரவான முடிவு வருமா? என்பதில் நிச்சயமற்ற நிலையே நிலவுகிறது.
இருப்பினும், ‘ஜனநாயகன்’ வெளியீடு இல்லை என்பது உறுதியானதால், பொங்கல் வெளியீட்டுக்கு பல்வேறு படங்கள் தங்களது வெளியீட்டை உறுதிப்படுத்தி வருகின்றன. அந்தவகையில், ஜனவரி 14 மற்றும் 15-ம் தேதிகளில் கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’, ஜீவா நடித்துள்ள ‘தலைவன் தம்பி வழியில்’, சந்தானம் நடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’, மோகன் ஜி. இயக்கியுள்ள ‘திரெளபதி 2’. விஜய் நடிப்பில் மறுவெளியீடாக ‘தெறி’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.
