பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

ஒருபக்கம் பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையிலான அதிகார மோதல் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இப்படியிருக்கும் நிலையில், பாஜகவும் என்.டி.ஏ. கூட்டணியை வலுப்படும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அடிக்கடி தமிழகத்திற்கு வருகை தந்து நிலவரத்தை கேட்டறிந்து செல்கிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட தமிழகம் வந்த அமித்ஷாவை, அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி உள்ளிட்டோர் தனித்தனியாக சந்தித்தனர். அப்போது பீகாரை மாடலை தமிழகத்திலும் கொண்டுவரும் நோக்கில் காய்களை நகர்த்தி ஆட்சியை பிடிக்கவேண்டும் என்று ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், தந்தை மகன் மோதல் ஒருபுறம் இருந்தாலும், பாமகவை என் டி ஏ கூட்டணியில் இழுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக, இன்று எடப்பாடி பழனிசாமியை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசினார். சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அன்புமணி இன்று (ஜனவரி 7, 2026) நேரில் சந்தித்து பேசினார். இதில் கூட்டணி தொடர்பான உடன்படிக்கை கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்று மாலை அன்புமணி தலைமையிலான பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், இந்த கூட்டத்திலேயே கூட்டணி பற்றிய முக்கிய அறிவிப்பை அன்புமணி வெளியிட அதிகப்படியான வாய்ப்பு இருப்பதாக விவரமறிந்தவர்கள் சொல்கின்றனர்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி இருவரும்,  கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அன்புமணி, அதிமுக தலைமையில் ஆட்சி அமைப்போம். தொகுதிகள் எண்ணிக்கை முடிவு செய்துவிட்டோம்.. எந்தெந்த தொகுதிகள் மற்றும் எண்ணிக்கையை பின்னர் அறிவிப்போம். எங்களுக்கு மகிழ்ச்சியான தருணம். மக்கள் விரோத ஆட்சி, பெண்களுக்கு எதிரான ஆட்சி ஊழல் ஆட்சி திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனை நீக்க வேண்டும் என்று கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version